கேள்விக் கணைகள்-தாய்ப்பால்

அனைவருக்கும் வணக்கம்!

இன்று என் நண்பருடன் ஒரு சின்ன விவாதம் செய்திட நேர்ந்தது. அர்த்தமுள்ள விவாதங்கள் புதிய சிந்தனைகளை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. முதலில் அவரைப் பற்றியும் அவர் போன்ற மனிதர்கள் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் செய்வது சரியாக இருக்கும்.
ஒரு நல்ல விஷயத்தை செய்ய முடியாதவர்கள், அதே நல்ல விஷயத்தை ஏற்கனவே சிறப்பாக செய்து கொண்டிருப்பவர்களை ஏளனம் செய்யகூடாது!
அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் என் நண்பர். என்னை பார்த்த உடனே என் உணவு முறை பற்றியும் என் வாழ்கை முறை பற்றியும் குறை சொல்வதும், ஏதேனும் விதண்டாவாதம் செய்வதுமே அவரது தலையாய நோக்கம். என்னை போற்றுபவர் பலர் இருக்க என்னை தூற்றுபவரை ஏன் கண்டு கொள்ள வேண்டும் என்று விலகிப் போக நான் விரும்பவில்லை. TRUTH MUST TRIUMPH அல்லவா! நான் செய்யும் நல்ல விஷயங்களை இவர் போன்ற மனிதர்கள் காண மாட்டார்கள். மாறாக நான் செய்யாத அல்லது செய்ய முடியாத, மேலும் தெரியாமல் செய்த பிழைகள் போன்றவைகளே இவர்கள் கண்ணில் படும்.
உதாரணமாக,
  • நான் மிருக வதை செய்து வரும் பொருட்களை உபயோகப் படுத்த மாட்டேன் என்றால், அவர்களது கேள்வி மது, விஸ்கி  போன்றவற்றை அருந்துவாயா என்று இருக்கும்.
  • வன்முறை பிடிக்காது என்று நான் சொன்னால், இலங்கையில் வாழ்ந்தால் என்ன செய்வாய் என்று கேள்வி வரும்.
  • பால் சாப்பிடக்கூடாது என்று சொன்னால் தாய்ப்பால் குடிக்காமல் வளர்ந்தாயோ என்பார்கள்
  • உலகமே நனிசைவ உணவு முறைக்கு மாறிவிட்டால் நாளை காலை பிறக்கவிருக்கும் என் உறவினரின் குழந்தைக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுக்கலாமா என்றும் கேள்வி வரும்.
அதாவது அவர்கள் சாமர்த்தியமாய் என்னை கேள்வி கேட்டு மடக்குகிறார்களாம்.
மாற்றங்களை விதைத்து விட்டு நாம் அறுவடை செய்யக் காத்திருக்கும்போது சிலர் எதிர்காலத்தில் ஏற்கெனவே வாழ்ந்து விட்டு வந்தது போல கேள்விகள் கேட்பார்கள். 
இன்னும் நூறு வருடம் கழித்து ஆவின் கம்பெனி இருக்குமா?
50 வருடத்தில் விவசாயம் பொய்த்து விடுமாமே, அப்போது யாருக்கும் காய்கறி கிடைக்காது போனால் நீ என்ன செய்வாய் என்றெல்லாம் மிகவும் சாமர்த்தியமான கேள்விகள் கேட்டு மடக்கும் புத்திசாலிகள் நிறைந்த நாடல்லவா இது.  சரி விவாதத்தின் தலைப்புக்கு வருவோம்.அவரது கேள்வி இது தான்.

ஒருவேளை நான் நனிசைவ உணவு முறைக்கு மாறிவிட்டால் (மாறும் எண்ணமில்லை ) என் மனைவியும் மாறி விட்டால், எதிர்காலத்தில் எங்களுக்கு பிறக்கும் குழந்தையும் நனிசைவ உணவு முறையில் வளர்க்க நினைத்தால் (வாயில் வடை சுடுவது என்பார்களே, அதான் இது) அப்போது என் மனைவிக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், நான் மருத்துவரிடம் போனால், அவர் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க அறிவுறுத்தினால் நான் என்ன செய்வேன். (அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது இது தான் தொலை நோக்குப் பார்வை என்பது )

நான் நனிசைவ முறையை பின்பற்றுபவன் தான் என்றாலும், என்னிடம் இந்த அருமையான கேள்விக்கு உடனடி பதில் இல்லை. நான் மருத்துவன் அல்லன். எனவே எனக்கு  கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. எனினும் பதில் அளித்தால் அவரும் மாறிவிடுவார் என்று ஒரு சின்ன ஆசை... பதில் தேட முற்பட்டேன். அதற்கான பதில் இதோ...

கீழே இருப்பது இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வு முடிவாகும்.

அதில் WEANED-என்பது முற்றிலும் தாய்ப்பால் மறுக்கப்பட்ட அல்லது தாய்ப்பால் தர இயலாமல் வேறு உணவை குழந்தைக்கு பழக்கப்படுத்தும் முறையை குறிக்கிறது. முதல் மாதம் முதல் 23 வாரங்கள் அதாவது 6 மாத காலம் வரை எடுக்கப்பட்ட ஆய்வில் 4-6% விழுக்காடு பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் அல்லது விருப்பமில்லை, எனவே குழந்தைக்கு வேறு வகையான பால் அல்லது செறிவூட்டப்பட்ட உணவை அளிக்கிறார்கள் என்பது தெரியும். அறிய இங்கே சொடுக்கவும்.  70% குழந்தைகள் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படுகிறார்கள். இந்த 4-6% வகையறாவில் என் மனைவி இருந்தால் என்ன செய்வது என்பது நண்பரின்  கேள்வி.

உலக சுகாதார அமைப்பு ( WHO) ஆறு மாத காலத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது என பரிந்துரை செய்கிறது. மேலும், இரண்டு வயது வரை தாய்ப்பால் உடன் வேறு சில செறிவூட்டப்பட்ட உணவுகளையும் கொடுக்க பரிந்துரைக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் பெண்களிடம் படிப்படியாய் குறைந்து வருகிறது. இந்தியாவிலும் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது வேப்பங்காயாய் கசக்கிறது என்பது உண்மை, மேலும் சில பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினால் தாய்ப்பால் கொடுக்கும் தகுதி இல்லாமல் போகிறது.

இந்நிலையில், தாய்ப்பாலுக்கு இணையான சத்துள்ள அதே சமயம் மிருகத் தொடர்பு அல்லாத உணவு இருக்குமா என்ற கேள்வி மிகவும் ஆராய்ச்சிக்குரியது.அறிக, தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு முதல் தர ஊட்டச்சத்தை தர வல்லது. தாய்ப்பாலுக்கு நிகர் எதுவும் இல்லை, பசும் பால் வெறும் சப்பைக் கட்டு மட்டுமே. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து தேவை அறிந்து சுரப்பதே தாய்ப்பால். கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுவழிகள் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை முற்றிலும் ஏற்படும் போது மட்டுமே பின்பற்றப்ப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கின்றது. மேலும் மாற்று வழி முறைகள் அனைத்தும் நனிசைவ உணவு முறையை சார்ந்ததே.   விதண்டாவாதம் பேசுவதற்கு இது பதில் அல்ல!

இயற்கையாகவே தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் நாம் எடுக்கும் சிறந்த முடிவு வேறொரு ஆரோக்கியமான தாய்மை அடைந்த பெண்ணின் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பது தான். தவிர, பசும் பாலை பிறந்த குழந்தைக்கு கொடுப்பது குழந்தையின் குடலையும் செரிமான இயக்கத்தையும் சேதப்படுத்தும் வாய்ப்புகள் உண்டு.

இது மட்டுமல்லாமல் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் பால் (தேங்காய், சோயா, நிலக்கடலை மற்றும் செரிவூட்டப்பட்ட சோயா பால் போன்றவை) குழந்தைகளுக்கு உகந்ததாகவே இருக்கிறது.
அரிசியில் இருந்து பெறப்படும் பாலும் சில காலத்துக்கு உதவும், ஆனால் முற்றிலும் இணையான பால் கிடையாது. மிகக் குறைந்த கொழுப்பு சத்து கொண்டது அரிசி பால்.
ஆனாலும் எச்சரிக்கை தேவை. 2 வயதுக்கு மேல் எந்த குழந்தைக்கும் பால் தேவை இல்லை... குறிப்பாக வேறொரு விலங்கினத்தின் பால்.

தாய்ப்பால் வங்கிகளும் இந்தியாவில் இப்பொழுது வளர்ச்சியில் உள்ளன. மும்பை மாநகரில் தாய்ப்பால் வங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அளவுக்கதிமாக சுரக்கும் தாய்ப்பால் விருப்பமுள்ளவர்களால் தானமளிக்கப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகிறது. மனிதனுக்கு மனிதனே உதவி! இதில் பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டியதில்லையே!

மீண்டும் எச்சரிக்கிறேன், தாய்ப்பால் மட்டுமே ஒரு குழந்தைக்கு மிக சிறந்த போஷாக்கை அளிக்கும். 6 மாத காலம் தொடர்ந்து தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையே ஆரோக்கியமாக வளரும். அதிகபட்சம் 2 வருடம் தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

என் நண்பருக்கு, அவரைப் போன்ற மக்களுக்கு  என் தனிப்பட்ட கருத்து, எதிலுமே குறைகளையும் தவறுகளையும் மட்டுமே காணும் பழக்கத்தை விடுங்கள். எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். வெறும் 6 விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. அதுவும் கூட முறையான மருத்துவப் பயிற்சியின் மூலம் சரி செய்து விடலாம். இங்கே காண்க. உங்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்யும் எண்ணமும், பிற உயிர்கள் மீது அக்கறையும் ஏற்படும் பட்சத்தில், நீங்கள் மேலும் மேலும் கற்றுணர முற்படுவீர்களே தவிர, விதண்டவாதமான கேள்விகளையும், எதிர்மறையான எண்ணங்களையும் முட்டாள் தனமான பேச்சுகளையும் கையில் எடுக்க மாட்டீர்கள். உங்கள் ஆரம்பக்கட்ட கேள்விகள் அனைத்திற்கும் என் தளத்தில் பதில் உள்ளது. ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வம் இன்றி படித்தால் பயன் இருக்காது.

அமைதியான உலகமே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. தட்டில் விழும் இறைச்சித்துண்டு வன்முறையால் வரும்போது நாம் எப்படி அமைதியை எதிர்பார்க்க முடியும்?

கற்றுணருங்கள்/.

ஏதேனும் பிழையோ விமர்சனமோ இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். விரைவில் பதில் அளிக்கப்படும்.

நன்றி!