உலகப்பொதுமறை கூறும் உன்னத கருத்துக்கள்

வணக்கம். 

மீண்டும் உங்களை எனது வலைப்பூ மூலம் தரிசிப்பதில்(!) மகிழ்ச்சி கொள்கிறேன். கல்லூரி மற்றும் இதர பணிகளில் மூழ்கிப்போனதில் நேரம் கரைந்ததே தெரியவில்லை. ஒரு பெரிய இடைவேளை. இதோ மீண்டும் வந்துவிட்டேன். :) தொடர்ச்சியாக மதங்களை மட்டுமே சார்ந்து எனது பதிவுகள் அமைந்து விட்டன. அதனால் இந்த முறை மதம் சாராமல், இயற்கை உணவு முறையின் தத்துவங்களையும், நன்மைகளையும் எழுத நினைத்தேன். உலகையே இரண்டு அடியில் புகுத்திய வள்ளுவ மகான் மாமிசம் உண்பதை தவறாக சொல்லவில்லையா? என்ற கேள்வி எழுந்தது. அக்காலம் தொட்டே உலகப்பொதுமறை என பெருமை கொண்ட, பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் ஏட்டை கொஞ்சம் புரட்டினேன். அதில் சில துளிகள் இதோ.... கசடறக் கற்று, நன்மை பெறுவீர்களாக!


மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் சேர இதனை எழுதுகிறேன். புலான் மறுத்தல் என்று ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி அதை அறத்துப்பாலில் நயமாகச் சேர்க்கிறார் வள்ளுவர். 

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: புலான் மறுத்தல்
குறள் 251: 
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்:
தன் உடம்பை வீக்குதற்பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்;  எவ்வகையில் அருள் செய்வதாய் கருதப்படுவான்?

குறள் 252:

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு.

பொருள்:
பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை; அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

குறள் 253:

படை கொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்
 உடல் சுவை உண்டார் மனம். 

பொருள்:
கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவது அல்லது, அருளை நோக்காதவாறு போல;  பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவதால்  அருளை நோக்காது.

குறள் 254:

அருள் அல்லது யாது எனில் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.

பொருள்:
அருள்யாது எனின், கொல்லாமை; அருள் அல்லது யாது எனின் கோறல் ஆகலான், அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.

குறள் 255

உண்ணாமை உள்ளது உயிர் நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

பொருள்:
ஒருசார் உயிர் உடம்பின்கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது;, அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின்; அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.

அல்லது 

(புனித)உயிர் நீத்தபின் ஒரு உடலானது நரகத்திற்குள்ளேயும் கூட அனுமதிக்கப்படாது. நரகம் கூட உயிரற்ற ஒரு உடலை ஏற்க வாயில் திறப்பதில்லை. இவ்வாறிருக்க இறந்து போன ஒரு ஊனை பார்த்து மனிதன் வாய் திறப்பதேன்?

குறள் 256:

தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்

பொருள்:
பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக; உலகம் கொல்லாதாயின்; பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

பொருள்:
புலாலாவது, பிறிதோர் உடம்பின் புண்; அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின்; 
அதனை உண்ணாது ஒழியல் வேண்டும்.

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்

பொருள்:
மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினை உடையார்; ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.

குறள் 259:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

பொருள்:
தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒருவிலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

பொருள்:
 ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.

இதில் குறள் எண் 255 என்னை மறுபடியும் மதம் சார்ந்த கட்டுக்குள் இழுக்கிறது. இஸ்லாமிய மதத்தின் ஹலால் கொள்கையை(நரக சொர்க்கங்களின் பாதையிலினின்றும் நீக்கப்பட்ட அனைத்தும் ஹராம்) பிரதிபலிப்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.


நன்றி!!!
என்றும் காதலுடன்,
ஜானெஹ் ஷங்கர்.

[ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்]
[To read in english click here]


இந்த வலைப்பதிவு கிரியேடிவ் காமண்ஸ் வலைதள எழுத்துடைமை பாதுகாப்பு உரிமத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனை உரிய அனுமதி இல்லாமல் மறுபிரசுரம் செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது. வலைதளத்தின் பெயரில் பகிர்ந்துகொள்ளலாம்.


Please share the article by the plugins available. Post your valuable comments and rate my article. The more you share, the farther spreadeth the light.