ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும்


சைவ உணவு முறை ஆரோக்கியமானதா?
நிச்சயமாக. படியுங்கள்
.நனிசைவ உணவு வகைகள்
ஆரோக்கியமான வாழ்வின் திறவுகோல்
பரிபூரண ஆரோக்கியத்திற்கும் நிம்மதியான வாழ்விற்கும் நனிசைவ உணவுகள் சக்திவாய்ந்ததோர் திறவுகோலாக விளங்குகிறது. நனி சைவ உணவுப் பட்டியலானது, பரந்து விரிந்த பல வகை சுவைகளையும்  சத்துக்களையும் கொண்டு மிளிர்கின்றது! அவை திருப்திகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும், நாவுக்கு ருசிகரமானதுமாக பல வகை பண்டங்களை கொண்டுள்ளது.
சைவ உணவுமுறையை மேற்கொள்பவர்கள் மாமிசம் உண்பதில்லை. ஆனாலும் பால் பொருட்களை உபயோகிக்கிறார்கள்.
ஆனால், நனி சைவ உணவு முறையை மேற்கொள்பவர்கள் விலங்குகளை துன்புறுத்தி தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளையும் உண்பதில்லை உபயோகிப்பதில்லை. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.
சைவ உணவுமுறையில், ஒரு சில குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும், நனிசைவ உணவுமுறையே அனைத்து உணவுமுறைகளிலும் சாலச்சிறந்து விளங்குகின்றது. அஃது , மனித உடல்நலத்தை பாதிக்கும் பல்வேறு வியாதிகளை குணப்படுத்த மட்டுமன்றி அத்தகைய வியாதிகள் மற்றும் நோய்கள் வராதிருக்கும் படி தடுக்கவும் செய்கிறது.
நனிசைவ உணவுமுறையின் சிறப்புகளை பார்க்கலாம்:
ஆரோக்கியமான இதயம்
கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச்சத்து. அளவுக்கு கொஞ்சம் மீறினாலும் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கும். மாமிச உணவு உண்பவர்களை விட, நனிசைவ உணவு உண்பவர்களுக்கு கொழுப்புச்சத்து மிகவும் சிறந்த கட்டுப்பாட்டில் உள்ளது. மாமிச உணவுகள் கொழுப்பை இயற்கையாகவே அதிகம் கொண்டுள்ளது. மாமிச உணவைத்தவிர்ப்பதால் நனிசைவர்கள் ஒரு ஆரோக்கியமான இதயத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
மேலும், நனிசைவ உணவுமுறையில் உள்ள, தனித்தன்மை வாய்ந்த தாவரப் புரதம் ஆரோக்கியத்தில் சிறந்த நன்மைகளை உண்டாக்க வல்லது. பலவிதமான உணவுமுறை ஆராய்ச்சிகளில் மாமிசப் புரதத்தின் சிறந்த மாற்றாக  தாவரப் புரதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவரப் புரதத்தின் உபயோகம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாகக் குறைக்கிறது. இத்தகைய சிறப்புகள் நனிசைவ உணவுமுறையை ஏனைய உணவுமுறைகளைக் காட்டிலும் சிறந்தது என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன.
இரத்த அழுத்தம்
1920 ஆம் ஆண்டில் இருந்து தற்காலம் வரை நடந்துள்ள எண்ணில் அடங்காத பல மருத்துவ ஆராய்ச்சிகள், நனிசைவ உணவு முறையை மேற்கொள்பவர்களின் இரத்த அழுத்தம், மாமிசம் உண்பவர்களைக் காட்டிலும் குறைவாகவும், சரியான அளவில் தொடர்வதையும் நிரூபித்துள்ளன.
சோடியம் போன்ற இரத்த அழுத்த்தை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள் மாமிச உணவில் இயல்பாகவே நிறைந்த்துள்ளது. நனிசைவ உணவுமுறையை மேற்கொள்வதன் மூலம், சோடியம் உட்கொள்ளப்படுவது தடுக்கப் படுகிறது.
நீரிழிவு
Diabetes எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் நனிசைவ உணவுமுறையை மேற்கொள்வதன் மூலம் விரைவான பலனை உணரலாம். சமீபகாலமாக நடந்துள்ள மருத்துவ ஆராய்ச்சிகள், இணை மாவுச்சத்து [கார்போஹைட்ரேட்] மற்றும் நார்ச்சத்து(பெரும்பாலும் தாவர உணவுகளில் மட்டுமே இருக்கும்)  போன்ற நீரிழிவைக் கட்டுப்படுத்தும் முக்கிய சத்துக்கள் மிகுந்தும், கொழுப்பு குறைந்தும் காணப்படும் நனிசைவ உணவுமுறையே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்த பரிந்துரை எனக்கூறுகிறது.
நனிசைவ உணவுமுறை நீரிழிவை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் சமயங்களில் செயற்கை மருத்துவத்தின் தேவையையே குறைத்துவிடுகிறது. நீரிழிவினால் அவதிப்படும் நபர்கள் இதய நோய்களினின்றும் காத்துக்கொள்ள கொழுப்பு குறைந்த நனிசைவ உணவு முறையை மேற்கொள்ளலாம்.
புற்று நோய் தடுப்பு
நனிசைவ உணவுமுறை புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது. மேலும் புற்றுநோயால் மரணம் அடையும் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை இதர புற்றுநோய் மரணங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவாக உள்ளது என ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்பகப்புற்று நோய் தாக்கும் அபாயம் மாமிசம் உண்ணும் பெண்களை விட நனிசைவ உணவு உண்ணும் பெண்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.
நனிசைவ உணவுமுறை எவ்வாறு புற்றுநோயை தடுக்கிறது?
முதல் காரணம்,  நனிசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது.
இரண்டாவது, புற்றுநோயைத் தடுக்கும் ஃபைடோ இரசாயனங்கள் (PHYTOCHEMICALS) தாவர உணவுகளில் இயல்பாகவே மிகுந்து காணப்படுகிறது.
உதாரணமாக, நனிசைவர்கள் பீட்டா கரோட்டீன் மற்றும் லைகோபீன் (BETA- CAROTENE AND LYCOPENE) போன்ற தாவர நிறமிகளை பெரும்பாலும் உட்கொள்கிறார்கள். இவை, கல்லீரல், சுவாசக்குழாய் மற்றும் இதயக்குழாயை தாக்கும் புற்று நோய் தாக்கும் அபாயத்தை குறைத்து அவர்களது ஆரோக்கியத்தை விளக்கும்.
மேலும், நனிசைவ உணவுமுறை புற்றுநோயை தடுக்கும் விந்தையின் சில காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. உதாரணமாக, நனிசைவர்களது இரத்தத்தில் இயல்பாகவே வெள்ளை அணுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. அவை, மாமிச உணவு உட்கொள்பவர்களின் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைக் காட்டிலும் அதிக வீரியமுடையதாய் இருக்கின்றன. இந்த வெள்ளை அணுக்களே நமது இரத்த்தின் போர்வீர்ர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுவது இவைகள் தான்.
சுண்ணாம்புச் சத்து
நனிசைவர்கள், சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள். மேலும், மாமிசப் புரதம் இல்லாத்தௌணவு முறை ஆதலால், எலும்பு முறிவு, முழங்கால் மூட்டு தேய்மானம் போன்ற அபாயங்களில் இருந்தும் இவர்கள் காக்கப்படுகின்றனர்.
அதிகமான மாமிச உணவு, எலும்புகளுக்குச் செல்லும் சுண்ணாம்புச்சத்தை முற்றிலும் தடுத்து விடுகின்றன. ஆதலால், உட்கொள்ளும் சுண்ணம்புச்சத்து குறைவாக இருந்தாலும், அவை இழப்பது தடுக்கப்படுவதால், தாவர உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக விளங்குகிறது.
பால் உணவுகளை தவிர்ப்பதால் ஏற்படும் சுண்ணாம்புச்சத்துக் குறைபாடை நனிசைவ உணவுமுறையில் உள்ள வேறு பதார்த்தங்கள் தீர்த்துவிடுகின்றன.
அவை என்னென்ன என்பதை இனிவரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்
நன்றி,
காதலுடன்,ஜாகீர் நாயக்


1.     அசைவ உணவு உண்ணும் இஸ்லாமியர்கள் பொதுவாக கீழ்க்காணும் வாதங்களை வைப்பதுண்டு. திரு. டாக்டர். ஜாஹீர் நாயக் என்பவரின் வாதங்களாக இது இணையத்தில் வலம் வருகின்றது. இது எதிர்வாதம் அல்ல, ஒரு சின்ன பாடம். கற்றுணருங்கள் இஸ்லாமியத்தோழர்களே!


  சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும். .

இந்த விஷயத்தை நான் முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்.

2.     இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.
அருள்மறை அனுமதி அளிக்கிறது, ஆனால் நிர்ப்பந்திக்க வில்லை. இனிமை!!! இறைவன் நிர்ப்பந்திப்பதை செய்யுங்கள்இறைவன் அனுமதிப்பதை அவசரத்தேவை அன்றி சுயநலத்துக்காக செய்யாதீர்கள். அது அனுமதி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள். சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும். 
இதுவும் அனுமதிதானே! இதைப் பின்பற்றுவதன் மூலம் ஏகப்பட்ட உயிரினங்கள் காக்கப்படுமே. வலி, பயம், வங்கொடுமை, தகாத இனப்பெருக்கம் போன்றவற்றில் இருந்து அவற்றை காக்க முடியுமே. சிந்தியுங்கள் நண்பர்களே!

3.     மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
இருக்கலாம். ஆனால், சைவ உணவுகளில் புரதம், அமினோ அமிலம் இல்லாத உணவே இல்லை என்று கூற முடியாது.
சோயா பீன்ஸ்- 8 அமினோ அமிலம் அடங்கிய அற்புதம்.
ஸ்பிருலினா- நீங்கள் வேண்டும் அமினோ அமிலங்கள் மற்றும் நியாசின் அடங்கிய ஒரு அற்புதம். 8 அமினோ அமிலங்களை உண்டால் மட்டுமே வாழ முடியும் என்பது கட்டாயம் இல்லை. சைவர்கள் என்ன அமினோ இல்லாமல் இறந்து விடுகிறார்களா என்ன?

4.     மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
அருமை! மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?”
இறைவன், மனிதனுக்கு கூரிய பற்களை மட்டும் படைக்கவில்லை, பிற உயிரினங்களின் உணர்வுகள், மற்றும் அவற்றின் வேதனையையும், அவை காட்டும் அன்பையும் புரிந்து கொள்ள கொஞ்சம் அறிவையும் படைத்திருக்கிறான், என்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்! அந்த அறிவு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு பிறகாவது, கொஞ்சம் பக்குவம் அடைந்து, முதிர்ச்சி பெற்றிருக்குமாயின், கூரிய பற்களுக்கு இக்காலத்தில் வேலை இல்லை என்று உணரலாம்! உணர்கிறீர்களா!?!?!?! சரி, கூரிய பற்கள் இருக்கிறது. பின் எதற்காக நிம்மதியாக வாழும் ஒரு விலங்கை பிடித்து, கூண்டில் அடைத்து பின் அது மறுத்தாலும் இழுத்து வந்து அறுத்து பின் சமைத்து கறியாக்கி உண்ண வேண்டும்? அப்படியே போகிற போக்கில் ஒரு மிருகத்தை பிடித்து இறைவன் கொடுத்த கூரிய பற்களால் கடித்து கிழித்து உண்ணலாமே! ஆனால் நிச்சயமாக முடியாது! பற்கள் உடைந்து விடும். ஆகவே, நீங்கள் சுவைக்காகவும், சுயநலத்துக்காகவும் மட்டுமே இறைச்சியை உண்கிறீர்களே தவிர நிச்சயமாக அதில் வேறு பயன் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. சரிதானே? | பச்சை மாமிசத்தை ஜீரணிக்கும் சக்தி மனித வயிற்றுக்கு இல்லை. மேலும் புலி, சிங்கம் போன்றவை கூட, செரிமானத்தை முடுக்க அருகம்புல் மற்றும் சில தாவரங்களை உண்ணும் | அக்காலத்தில், இஸ்லாம் தோன்றிய காலத்தில், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம். மிருகங்கள் அவற்றின் விருப்பம் போல காற்றை சுவாசித்து கொண்டு சூரிய(அல்லா) ஒளியின் கதகதப்பையும் உள்வாங்கி சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் இருந்திருக்கலாம். அது ஓரளவு நீங்கள் கூறும் ஹலால் உணவுமுறையின் பேரில் இருக்கலாம். ஆனால், தற்போது நீங்கள் உண்ணும் உணவு ஹலால் என்பதை எங்ஙனம் தாங்கள் கூறுவீர்கள். ஒவ்வொரு கோழியும், தங்களது தட்டுக்கு வருவதற்கு முன்னர் எவ்வளவு இழிவான முறையில் நட்த்தப்படுகிறது தெரியுமா? காற்றோட்டமாக 4 கோழிகள் நடமாட கூட முடியாத அளவிற்கு உள்ள ஒரு கூண்டில், அல்லது பட்டியில், சுமார் 50 கோழிகள் அடைக்கப்படுகின்றன. பின்னர் அங்கேயே மலம் கழித்து, உண்டு, சிறகுகள் உடைந்து, இரத்தம் சிந்தி, பின் அங்கிருந்து கால்களில் கட்டுண்டு வண்டிகளில் தலைகீழாக தொங்கி, பின்னர் கறிக்கடைக்கு வந்து அங்கே வெட்டப்பட்டு உங்கள் தட்டுக்கு விருந்தாக வருகிறது. இதுதான் நீங்கள் சுகாதாரமாக உண்ணும் ஹலால் உணவா?

உங்களுக்கு தெரியுமா? ஹலால் வாழ்க்கை முறைக்கு சைவ உணவே சரியான தேர்வு என்று. உங்கள் நாவு அல்லாஹ்வை மறந்து சுவையை மட்டுமே விரும்புமாயின் தற்போதைய அசைவ உணவு ஒருபோதும் ஹலால் முறைக்கு பொருந்தாது. கொல்லப்படும் விலங்கு, கொல்லப்படும் முன்பு வரை ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் மட்டுமே அதை கொல்ல வேண்டும். இதுதானே ஹலால் முறை. மனசாட்சியை தொட்டு சொல்லுங்களேன், நீங்கள் மாமிசம் வாங்கும் கடையில், வெளியே தொங்க விடப்பட்டுள்ள கோழிகள் அனைத்தும் சுகாதாரமாக, ஆரோக்கியமாக இருக்கிறதா? அதை அறுத்துக் கொல்பவர் முஸ்லிமா? அருள்மறை அனுமதிப்பதால் மாமிசம் சாப்பிடுகிறீர்கள், அதே அருள்மறை சுத்தம் சுகாதாரம் பற்றி கூறுவதை கோட்டை விட்டு விடுகிறீர்களே. தயவு செய்து உங்கள், சுவை மொட்டுக்களுக்காக இறை வேதங்களை வக்காலத்து வாங்க இழுத்து அதன் புனித்தை களங்கப்படுத்த வேண்டா!

அடுத்தடுத்து இந்து மதத்தின் கொள்கைகளையும், ஜைன மத்த்தின் கொள்கைகளையும் அலசியிருப்பது தாங்கள் செய்யும் குற்றத்தை நியாயப்படுத்த முயற்சிப்பதும், பிற மதங்களிடம் இருந்து வக்காளத்து வாங்க சில கருத்துக்களை சேகரிப்பதும் தெரிகிறது. மதங்கள் மனிதர்கள் உருவாக்கிய தங்கக் கூண்டு. தயவு செய்து மதங்களின் கொள்ககளை உணவுமுறை, புலன் இன்பம் போன்ற மனித எச்சங்களுக்காக வாதாட உபயோகிக்காதீர்கள்.

8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.
ஆமாம். இருக்கிறது. அவைகளுக்கு வலிக்கும். அதன் அலறலை கேட்க கருவியும் உண்டு. கண்ணுக்கு தெரிந்து துடித்து சாகும் மிருகங்களின், வெறும் காதால் கேட்க கூடிய அளவுக்கு அலறும் அலறல்களையே நீங்கள் பொருட்படுத்த மறுக்கிறீர்கள் பின் பிறர் நரம்பு மண்டலமே இல்லாத தாவரம் அலறும் என்று கூறுவதை எங்கனம் ஏற்பது. இதுவும் தாங்கள் கூறும் ஒரு வித சப்பைக்கட்டு தான். மேலும், ஆதிவாசியாக இருந்து, பின் பக்குவமடைந்து மனிதன் 5000 ஆண்டுகள் கழித்து, குறைந்தபட்சம் ஒரு மிருகத்தின் வதம் தர்ம்ம் ஆகாது என புரிந்து கொண்டு சைவ முறையை கையாளக்கற்றான். எனவே, இனி வரும் ஆண்டுகளில் உலகத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அவனால் செவிகளால் கேட்க முடியும் செடிகளின் அழுகுரலின் பட்சத்தில் வேறு வகையான வாழ்வை கண்டுபிடித்து வாழ வேண்டும் என நேர்மறையாக நினைப்போமே! அதை விடுத்து, தாவரங்களும் அழும், மிருகங்களும் அழட்டும், தாவரங்கள் வலியை உணரும், மிருகங்களும் வலியை உணரட்டும் என்று நினைப்பது சற்றே மட்த்தனமாக இல்லையா? சரி, உங்களுக்கு, குரான் தெரிகிறது, கீதை தெரிகிறது, விவிலியம் தெரிகிறது, வார்த்தைகளால் விவரிக்கும் திறன் இருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால் இறைவன் கூறியது எல்லாம் மனிதனுக்கே சொந்தம் என்பது நியாயமா?

9. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
இதை இதற்கு மேல் விளக்க முடியாது. மேலே உள்ள பத்தியை மீண்டும் படித்துக்கொள்ளவும்.

10. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.
நான் இதை ஏற்றுக்கொள்கிறேன். மிகவும் நல்ல கருத்து. நீங்கள் மிருகங்களை சுவைக்காகவும், சுயநலத்திற்காகவும் கொல்கிறீர்கள். ஆகவே உங்களுக்கு அதிக தண்டணை தருமாறு நான் அல்லாஹ்விடம் வாதாடுகிறேன்.

11. கால்நடைகள் பெருகும்:
கால்நடைகள் மட்டும் தான் பெருகுமா? மனிதர்கள் பெருகவே மாட்டார்களா? அதற்காக, ஒரு நூறு கோடி மக்களை கழுத்தை அறுத்து கொன்று விடலாமா? அணுகுண்டு வைத்து அழித்துவிடுவோமா? இதற்கு நமக்கு உரிமை இல்லை என்கிறீர்களா? பின் நமக்கு முன்னும் பின்னும் இவ்வுலகில் தோன்றிய ஜீவராசிகளை கொன்று உலகை சமன்படுத்த யார் உரிமை கொடுத்தார்? தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான்.
அல்லாஹ் நம் அனைவரையும் கொன்றுவிடுவாரா…? நிச்சயமாக இல்லை. அல்லது அல்லாஹ் தான், தீவிரவாதம், சுனாமி பூகம்பம் போன்றவற்றை உருவாக்கி கொத்து கொத்தாக மக்களை அழித்து உலகை சமன் படுத்துகிறாரா? அதுவும் இல்லை. நீங்கள் கருத்தடை முறையை மறுக்கிறீர்களே. மனிதன் மட்டும் பெருகிக்கொண்டே போகலாம். ஆனால் மற்ற ஜீவராசிகள் பெருகிவிடக்கூடாது. அதற்கு பேசாமல் மிருகங்களுக்கு கருத்தடை செய்து விடலாமே. பிறவி கொடுத்து கொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் உரிமையும் மனிதனுக்கு இல்லையே? கூட்டிக் கழித்து பார்த்தால், மனிதர்கள் மட்டும் வாழும் அற்புத பூமியே உங்கள் இலக்கு என்பது போல் இருக்கிறது.

| வயிறு நிறைந்து விட்டால், தன்னுடன் இருக்கும் மான் குட்டியை இரையாகப் பாராமல் அதன் ஆத்மாவைப் பார்த்து அன்பு செலுத்தும் இந்த சிறுத்தைகளை பாருங்களேன். ஆனால், வயிறு நிறைந்தும் நாவுக்கு அடங்காத பித்து பிடித்துப்போய் அலையும் மனித மனத்தை பாருங்கள். சற்றே கேவலமாக இருக்கும். இத்தனைக்கும், ஆண்டவன்(!?) இவற்றிற்கு கூரிய பற்கள், மணிக்கு 110 கி.மீ வேகத்தை அடையும் திறனையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஐந்தறிவு கொண்ட மிருகங்களே மாறும் போது…………………………………………
அல்லாஹ் நிச்சயம் உங்களை மாற்றுவார். அவர் அன்றி யாரால் இத்தகைய மாற்றத்தை செய்ய முடியும். நிச்சயமாக, உங்களை மாற்ற என்னால் முடியாது, ஆனால் என் இறைவன் மாற்றுவார். |
உங்கள் தவறுகளை ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள். தவறை ஏற்றுக்கொண்டு இறைவனை சரணடைவதால், நீங்கள் சுவனத்தின் வாயிற்படியை நேரடியாக அடைகிறீர்கள்.  

இறுதியாக,
'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.'
நீங்கள் உண்ணும் உணவு, கீழே உள்ள படங்களைப் போல் பரிசுத்தமானதுஎச்சரிக்கை!!! இது ஹலால் அல்ல!!!இங்கே நான் மதம் என்பதைத் தாண்டி மனிதம் எனும் விருட்சத்தை விதைக்கவே பேசுகிறேன். இங்கே எந்த மதக்கோட்பாடுகளுக்கும் இடம் தர விரும்பவில்லை. உங்களது கருத்துகளில் மதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன, ஆகையால், நானும் மதங்களை பற்றி பேசியிருக்கிறேன். இதில் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை என நம்புகிறேன். என்னையும் அறியாமல் புண்படுத்தியிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும். நன்றி.

காதலுடன்,