சைவ உணவு முறை பற்றி அறிந்து கொள்ளும் முன், நம்முடன் இப்பூமிக்கு வந்த சக உயிர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். மிருகங்கள் என்று நாம் வகைப்படுத்தியிருக்கும் உயிர்களை நாம் உண்ணாதிருப்பதன் நன்மைகள் என்னென்ன? அவைகளைப் பற்றி நாம் அக்கறை கொள்வதன் காரணம் என்ன? போன்ற சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்.
நாம் ஏன் மிருகங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும்?
தேவையற்ற வலியையும், கசப்பான அனுபவங்களையும் நாம் யாரும் விரும்புவதில்லை. நம்மைப்போலவே உண்டு உறங்கி வாழும், முதுகெலும்பு கொண்ட உயிரினங்களாகிய மிருகங்களும் நாம் உணர்வது போலவே வலி பயம் மன அழுத்தம் போன்றவற்றை உணர்கின்றன. எனவே அவற்றின் இடத்தில் நம்மை நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள். பிற உயிரினங்களின் நலனையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். அதுவே நாம் மனிதனாய்ப் பிறக்க காரணமும் மனிதமும் ஆகும்.
ஒரு மிருகத்திற்காக நாம் ஏன் நமது சுகபோகங்களையும், சுவையையும் சௌகரியங்களையும் தியாகம் செய்ய வேண்டும்?
நாமும் ஒரு மிருகம் தான் என்பதை இங்கே நிச்சயம் நினைவு கூர வேண்டும். ஆனால், இறைவன் நமக்கு சற்றே முற்போக்கான ஆறாம் அறிவையும் கொடுத்திருக்கிறான் என்பதையும் நாம் மறக்ககூடாது. இறைவனின் இந்த பாரபட்சத்தை நாம் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறாவது அறிவு இருப்பதால் நாமே இறைவன் என்றும் நினைத்திடக் கூடாது.
வாழ்வின் சில இன்பங்களையும், சுகபோகங்களையும் தியாகிக்காமலேயே, நாம் நம்மை பூமியின் உன்னதப் பிறவிகளாக பாவித்துக் கொள்கிறோம். நமது சுகபோகங்களை இழந்து, மறந்து அதன் மூலம், நம்மை விட வலியதோர் சக்தி இன்புறும் நிலை கொண்ட ஒரு சமூகத்தை நாம் ஒரு போதும் விரும்பமாட்டோம். எனவே, பிற உயிரினங்கள் தங்களது சுகங்களையும், சுதந்திரத்தையும் தொலைத்து, தியாகம் செய்து நமக்கு அளிக்கும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது என்பது எங்ஙனம் தியாகம் ஆகும்?
மேலும் சைவ உணவு முறையில் தியாகம் என்ற சொல்லுக்கே இடமில்லை. சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் சைவ உணவு முறையில் உண்டு. மேலும் மனிதம் எனும் மரபு சார்ந்த உணவு முறை சைவ உணவு முறையே ஆகும்.
நாம் கொல்லவில்லை என்றால் மிருகங்கள் மரணிக்காதா?
நாம் உணவுக்காகவும், பொருள் ஈட்டவும், மிருகங்களைக் கொல்வதன் மூலம் அவற்றை ஒருபோதும் இயற்கையான மரணத்திலிருந்து காப்பாற்றுவதில்லை. மரணம் அனைவருக்கும் நிச்சயமான ஒன்றாகும். நிச்சயம் என்றோ ஒரு நாள் மரணம் அடையப் போகிறோம், இன்றே இறந்துவிடுவோம் என்று நாம் மரணத்தை தழுவுகிறோமா? தற்கொலை செய்துகொள்கிறோமா? இல்லை நாம் கொலை செய்யப்படுவதை விரும்புவோமா? வாழ்க்கையை நாம் விரும்புவது போலவே, பிற உயிரினங்களும் விரும்பும் என்பதை நாம் மறக்ககூடாது.
கொல்லவில்லை என்றால் மிருகங்கள் பெருகி இவ்வுலகை நிறைத்துவிடாதா?
ஆறாவது அறிவை இங்கே நாம் உபயோகப்படுத்தினால் இக்கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என்று நமக்கு புரியும். மனிதர்களின் பெருக்கத்தை கையாளும் அதே கருத்தடை முறைகளை மிருகங்களிடமும் பயன்படுத்தலாம். இது கொல்வதைக் காட்டிலும் மிகவும் மனிதமான முறையாகும். கருத்தடை செய்வதன் மூலம் உயிரினங்கள் அழிந்து விடாதா? என்ற கேள்வி சில அறிவிலிகளுக்கு வரலாம். இனப்பெருக்க சுழற்ச்சியை அறிந்திருந்தால் இதன் பதில் உங்களுக்கு புரியும். கருத்தடை செய்வதால் உயிரினங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமே ஒழிய குறைக்கப்படமாட்டாது.
மனிதனின் தேவைகளுக்காக ஆண்டுதோறும் பல பில்லியன் கணக்கில் மிருகங்கள் இயறகைக்கு முரணாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு கொல்லப்படுகின்றன. நாம் இத்தகைய இரக்கமற்ற தேவைகளை தவிர்ப்பதன் மூலம் இந்த இனப்பெருக்கமும் அதைத் தொடரும் கொலைகளும் நிச்சயம் ஒழியும்.
உலகில் மனிதர்களுக்கே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்பொழுது நான் ஏன் மிருகங்களின் பிரச்சினைகளை மனதிற்கொள்ள வேண்டும்?
இறைவனும் அவன் நமக்களித்த இப்பூமியும் அனைவருக்கும் பொதுவானது. பிறர் நலனுக்காக செயல்பட நமக்கு மிகவும் குறுகிய அல்லது அளவான நேரம், வசதி ஆகியன இருக்கின்றது. நாம் வாழப்போகும் 70 அல்லது 80 வருட வாழ்நாட்களில் சராசரியாக 45 வருடம் மட்டுமே நம்மால் பிறருக்கு உழைக்க முடியும். உழைக்காமலேயே, நமது அன்றாடத்தேவைகளில் ஒன்றிரண்டை தவிர்ப்பதன் மூலம் நாம் செய்யும் ஒரே தர்மம், சைவ உணவு முறையை மேற்கொள்வதாகும்.
மேலும், மனிதர்களின் பிரச்சினைகளும், அதன் காரணங்களும், பெரும்பாலும் ஒரு தனி மனிதனால் நெருங்க முடியாத அளவிற்கு தூரத்திலும், தீர்வுகள் கடினமானதாகவும் இருக்கிறது. பஞ்சம், போர் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றை நீங்களோ நானோ தனி மனிதனாக நின்று ஓர் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது. ஆனால், மிருகங்களின் பிரச்சினைகளான பசி, வலி, பயம் ஆகியன நம்மை சுற்றி உள்ள எதார்த்த வாழ்வில் அழுத்தமாக நிறைந்த்துள்ளன. சைவ உணவு முறையை மேற்கொள்வதால் எந்த வித தனி அக்கறையும் தியாகமும் இல்லாமலேயே மிருகங்களின் பிரச்சினைகளில் ஒரு நேர்மறையான தாக்கத்தை நம்மால் உண்டு பண்ண முடியும்.