Showing posts with label article. Show all posts
Showing posts with label article. Show all posts

For my Well wisher's wellness...

நலம் விரும்பியின் நலனுக்காக...


அனைவருக்கும் வணக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்லூரி, முடிந்தவுடன் பணி, பின்னர் குடும்ப சூழல்... இடைவெளிக்கு ஏகப்பட்ட காரணங்கள். எனினும் இதோ அடுத்த இடுகை.

என் பக்கத்து வீடு நண்பர் ஒருவர், நண்பர் என்பதை விட நலம் விரும்பி என்று கூட சொல்லலாம். எதையும் பல முறை யோசித்து செய்பவர். தீர்க்கமாக முடிவெடுப்பவர். ஆனால் அவர் அசைவ பிரியர். என்னுடைய நலம் விரும்புபவர், பிழை செய்வதை பார்த்துக் கொண்டு நான் எவ்வாறு சும்மா இருக்க முடியும். எனவே அவரிடம் நேரடியாகவே விசாரித்தேன், "அசைவம் இல்லாமல் உங்களால் ஆரோக்கியமாக இருக்க முடியுமே? இது அவசியம் என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று. அவர் சொன்ன பதில் என்னை மேலும் ஆழமாக சிந்திக்க வைத்தது. விவாதத்தின் சாரத்தை மட்டும் உரையாடல் வடிவில் இங்கே தருகிறேன்.

நண்பர்: நானும் என் வாழ்வில் பால் கூட அருந்தாமல், அசைவம் உண்ணாமல் இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை.

நான்:    எப்போது எதனால் நீங்கள் இந்த முடிவை எடுத்தீர்கள்? பின் எதனால் கட்டுபாட்டை கை விட்டீர்கள் ?

நண்பர்: சில வருடங்களுக்கு முன் நான் ஒரு ஞானி அல்லது துறவி ஒருவரின் மேல் கொண்ட பக்தியின் பேரில் அசைவம் பால் போன்றவற்றை உண்ணாமல் இருந்தேன். அவருக்கு ஏகப்பட்ட தொண்டர்கள், சிஷ்யர்கள் மற்றும் ஆசிரமங்கள் உண்டு. என் வாழ்வில் இருந்த கஷ்டங்களை நீக்கி விடுவார் என்று எண்ணி அவரது ஆசிரமத்தில் பணம் கட்டி உறுப்பினராய் சேர்ந்தேன். அவரை நேரில் கண்டதில்லை. ஆனால் அவர் வருவார், வந்து கொண்டிருக்கிறார் எனும் வாக்கை மட்டுமே நம்பி அங்கே இருந்த பலருள் நானும் ஒருவன். அவரது தரிசனமும் நிம்மதியும் கிடைக்க சில ஆசாரங்களை கடைபிடிக்க வேண்டியிருந்தது. அவற்றில் புலான் மறுத்தலும் ஒன்று. மேலும், அரை வயிறு மட்டுமே உண்ண வேண்டும், விடியும் முன் எழுந்து சுத்தம் பேண வேண்டும், என பல விஷயங்களை பின் பற்றினேன். ஆனால், நான் எதிர்பார்த்த அமைதியோ, நிம்மதியோ எனக்கு கிடைக்கவில்லை. மேலும், என் வாழ்வில் சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே நான் எதற்காக இவ்வளவு தியாகங்களை(!) செய்து என்னை வருத்திக் கொண்டு ஆசாரங்களை கடை பிடிக்க வேண்டும் என்று ஆசிரமத்தை விட்டு விலகினேன். ஆசிரமம் போலி என்பதை அறிந்தேன்.
இறைவன் என் பக்கம் என்பதில் நம்பினேன். உழைத்தேன். உழைக்கும் நேரத்தில் என்னால் அசைவம் உண்பதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் சோர்வாக உணர்ந்தேன். எனவே அசைவம் சாப்பிட ஆரம்பித்தேன்.

இங்கே உரையாடல் முடிகிறது.
இது போன்ற தடுமாற்றங்கள் பலரது வாழ்வில் வருவது இயல்பே! இதில் இவர் போன்ற தீர்க்கமானவர்களும் தடுமாறி விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை! போலிகள் பெருகிப்போனது மையக்காரணம். ஆனால், இந்த தடுமாற்றத்திலும் ஒரு நல்ல விஷயம், புலான் மறுத்தல் பால் மறுத்தல் போன்ற ஆசாரங்களை இவர் சில காலம் கடைபிடித்திருக்கிறார். இங்கே இவர் ஒரு நல்ல வழக்கத்தை ஒரு முரணான குறிக்கோளுடன் ஏற்படுத்தியிருக்கிறார், என்பதை கவனிக்க வேண்டும்.

A Right Habit with a Wrong Attitude.

ஞானியின் தரிசனத்திற்காகவும், நிம்மதிக்காகவும், வீட்டை விரிவு படுத்த வேண்டியும், இவ்வழக்கத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். குறிக்கோள்கள் பூர்த்தியாகாத பட்சத்தில் விரக்தியின் காரணமாக ஒரு நல்ல வழக்கத்தை கைவிட்டிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் அசைவம் உண்டால் மட்டுமே தெம்பாக வேலை செய்ய முடியும் இல்லையேல் சோர்ந்து விடுவோம், என்ற சுய படிப்பினையை கற்றுக் கொண்டு அசைவம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.

இதே நிலை தான் எனக்கும் என்று கூறுபவர்களுக்கும், இந்த நிலையில் தற்போது உழன்று கொண்டிருப்பவர்களுக்கும், இனி இந்நிலை நேரக்கூடாது என நினைப்பவர்களுக்கும் இந்த இடுகையை அளிக்கிறேன். இதில் இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
முதல் விஷயத்துக்கு வருவோம். அறிவுரைகளே இந்த உலகில் இலவசமாகவும் அதிகமாகவும் கிடைக்கும் பொருளாகும். ஆனால், அதை ஒருவன் இலவசமாக அளிக்கும் போது மனம் அதை ஏற்க மறுக்கிறது. உதாரணத்திற்கு என்னையே சொல்லலாம். நான் அசைவம் சாப்பிடுவது அனாவசியம், ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்வதால் எனக்கு பணம் கிடைக்காது. ஆனாலும் அந்த ஆலோசனையை நான் தவறாமல் அனைவருக்கும் வழங்கி விடுவேன், இலவசமாக. யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்து, பல ஆயிரங்கள் செலவு செய்தபின், கணிசமாக ஒரு தொகையை வாங்கிகக்  கொண்டு மருத்துவர் சொல்வார், தண்ணீர் அதிகம் குடியுங்கள், உப்பு சேர்க்க வேண்டாம், சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள், அசைவம் கூடவே கூடாது. முட்டை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்(இது ஆறுதலுக்காக) ஆனால் மஞ்சள் கரு சேர்க்கக வேண்டாம், சுவையான உணவையே நினைத்துப பார்க்க முடியாதவாறு இன்னும் ஏதேதோ! ஆனால், மிருக வதை செய்து வரும் எந்த பொருட்களையும் சேர்க்காதீர்கள், ருசியாகவும் ஆரோக்கியமாகவும் உணவு உண்ணுங்கள், சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளுங்கள் என ஆரோக்கியமாக வாழ நான் இலவசமாக கூறும் ஆலோசனையை ஒருவரும் ஏற்க மாட்டார்கள் . காசு கொடுத்து வாங்கிய டாக்டரின் ஆலோசனைகள் பத்தியம் தவறாமல் கடைபிடிக்கப்படும். இது போலத்தான் சாமியார் மடங்களும் அங்கே கொடுக்கப்படும் ஆலோசனைகளும். வாங்கிய காசுக்கு ஏதேனும் நல்லதை சொல்ல வேண்டுமே என்று நாங்கள் இலவசமாக சொல்வதையே அவர்கள் சற்று தத்துவார்த்தமாக சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால் பகவான் உங்கள் முன் தோன்றுவார், வேண்டிய வரம் கிடைக்கும் என்று பூசி மெழுகுவார்கள். நாமும் Fact-u fact-u fact-u  என்று ஆமோதிப்போம். ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால் இத்தகைய வழக்கங்களை பின்பற்றுவதனால் பகவன் தரிசனமோ, வரமோ கிடைக்காது... மாறாக ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், மற்றும் புண்ணியமும் கிடைக்கும். வேறென்ன வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு,

Don't Blame Others for disappointing you, but blame yourself for expecting too much!

என்று. அதிகம் எதிர்பார்ப்பதே தவறு, என்பது இதன் அர்த்தம். எனவே ஒரு நல்ல வழக்கத்தை கடைபிடிக்கும் போது அதிகம் எதிர்பார்க்காமல், நிதர்சனத்தையே எதிர்பார்த்தால் பலன் நமக்கு சாதகமாக இருக்கும். அதே போல பணத்துக்காக கிடைக்கும் எந்தவொரு அறிவுரையும் ஆலோசனையும் நன்மைக்காக இராது.

இரண்டாவது விஷயம், அசைவம் உண்ணாதே என்று சொன்னவுடன் சிலர் காதுக்கு உணவு உண்ணாதே என்று கேட்கிறது போலும்... நம்மை அப்படி முறைத்துப் பார்க்கிறார்கள். அசைவ உணவை பகட்டாகவும் கௌரவமாகவும் நினைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். ஒரு உயிரை வதைத்து உணவு படைக்க எந்த கடவுளும் விரும்புவதில்லை. அதே நேரம், அரை வயிறு சாப்பிட்டு பசியோடு தான் என்னை தரிசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் கடவுள் விதிக்கவில்லை. வயிறு புடைக்க உண்ணுங்கள். ஆனால், உண்ணும் உணவு இறைத்தன்மையுடதாய் இருக்கட்டும். அகிம்சை முறையில் உழைத்துப் பெற்றதாய் இருக்கட்டும். ருசியாக உண்ணுங்கள், ஆனால் ஆரோக்கியமாக உண்ணுங்கள். நம்மைப் போலவே கண் காது மூக்கு கொண்டு, நம்மை போலவே உணர்ச்சிகளை பெற்றுள்ள ஒரு உயிரை கொன்று நாம் உணவு உண்போமானால், நாம் எப்படி அமைதியையும் அன்பையும் விதைக்க முடியும்? அசைவம் உங்கள் உடலுக்கு தெம்பு கொடுக்காது. ஆறறிவு படைத்த உங்கள் உடலின் சோர்வையும் தெம்பையும்  ஐந்தறிவு கொண்ட ஒரு உயிரின் பிணம் தீர்மானிக்கிறதா என்ன? இல்லவே இல்லை, மனமே உங்கள் சோர்வுக்கு காரணம். மாமிசத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடே உங்கள் உடலின் தெம்பை போலியாய் ஏற்படுத்துகிறது. அதே ஈடுபாட்டை நீங்கள் உண்ணும் சைவ உணவில் வைத்தாலும் உங்களுக்கு தெம்பு வரும். மேலும், மாமிசம் உங்கள் உடலின் தெம்பை வெகுவாக குலைக்கும் என்பதே அறிவியல் உண்மை, உங்கள் மனம் மட்டுமே தெம்பாக உணரும் அன்றி உங்கள் உடல் உள்ளுக்குள்ளே குலைந்து கொண்டிருக்கும். இயற்கை உணவுகளான காய் கனிகள் உங்கள் உடலை சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. மாமிசம் உங்கள் மூளையை மந்தமாக்குகிறது!

இந்த ஆலோசனையும் இலவசம் தான். உங்களால் முடிந்த வரை பின்பற்றுங்கள், உங்கள் நலம் விரும்புவோருக்கு ஏதேனும் கைம்மாறு செய்ய விரும்பினால் அவர்களுக்கும் இதை கூறுங்கள். ஏனெனில், பணம் இந்த உலகை இயக்க கூடாது அல்லவா? அன்பினால் இயங்கும் உலகம் அமைதியாய் இயங்கும். அந்த அன்பு வட்டத்தில் வாயில்லா ஜீவன்களையும் சேர்த்துக் கொள்வது தவறல்லவே!

மாமிசக் கடை அருகே சென்றால் நான் மூக்கை பொத்துவேன். அலறல் சத்தம் கேட்டால் காதை மூடுவேன், ஆனால் என் நண்பர் அங்கேயே நின்று தோலை உரிக்கும் வரை பார்த்து, நிதானமாக வாங்கி சமைத்தும் சாப்பிடுவார். ஏனேன்றால், அந்த நாற்றமும், அந்த அலறலும் அவருக்கு பழகிப் போய் விட்டது.  தீய விஷயங்களே பழகிப் போகும்போது, நல்ல விஷயங்கள் பழகாதா என்ன?

 


எனவே, அன்பர்களே, இன்று முடிவெடுங்கள்... மிருக வதையை ஒழிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள், பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம், உங்கள் தட்டில் சில மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் வயிறும், அடுப்பங்கரையும் பிணவறை அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இறைவன் காட்சியளிப்பார் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால், உங்களுள் இறைவன் உறைவதை உங்களால் உணர முடியும் என்பதை அடித்து சொல்லுவேன். ஆரோக்கியமான உடல் தானே கோவில்?

                                              மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,
                                                                            நன்றி,
                                                                      காதலுடன்,
                                                             ஜானெஹ் சங்கர்.