கவிதை


சமீபத்தில் இந்த கவிதையை வாசித்தேன். குழந்தைத் தொழிலாளர் முறையையும், ஒரு தவறான படிப்பிணை சமூகத்திலும் தனி மனித வாழ்விலும் ஏற்படுத்தும் பிழைகளையும் ஒருங்கே சாடுவது போல் அமைந்த அந்த கவிதை இதோ உங்களுக்காக....
 
இறைச்சிக்கடையொன்றில்

உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு

உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

அதுநாள் வரை

அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை

வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது

மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது

வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது

மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

முதல் கொலைக்கான

உத்தரவு வந்தக் கணம்

அவன் திகைக்கிறான்

கோழிகளையும், ஆடுகளையும்

மலங்க மலங்க பார்க்கிறான்

பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்

மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்

முன்பு இந்த உலகத்தில் தோன்றி

மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்

மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்

ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்

கண்களை மூடிக்கொள்கிறான்

எதையோ தீவிரமாக யோசிக்கிறான்

அந்தக்கோழியை விட்டுவிட்டு

இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்

அதன் கழுத்தை திருக

அவனுக்கு தயக்கமாக இருக்கிறது

கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்

கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்

கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்

கடவுளை தொழுகிறான்

இறைச்சிக் கடை உரிமையாளர்

அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்

தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்

ஆற்றுப்படுத்துகிறார்

கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்

சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்

கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்

கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்

அவன் கொலை செய்யும் உயிர்கள்

துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்

பருவத்துக்கு வந்துவிட்ட

போர்வீரனாய் கர்வம் கொள்ளும்

அந்த சிறுவன்

செய்யும் முத‌ல் கொலை

மிகுந்த கொடூரமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் எடுத்துக்கொண்ட கால அளவு

மிகுந்த நீளமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் மனதில் விவாதித்தது

மிகுந்த தத்துவார்த்தமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் வாழ்ந்த வாழ்க்கை

மிகுந்த சிக்கலானது

அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்

மிகுந்த எண்ணிக்கையிலானது

அந்த சிறுவனது

மரத்திலிருந்து உதிர்ந்த

இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன!

இப்போதெல்லாம்,

அவன் விரல்கள்...

ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்

ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்

ஒரு மிருதங்க கலைஞனாய்

இறைச்சியை வெட்டுவதற்கு

பழக்கமாகியிருந்தது 

 இந்த கவிதையை படிக்கும்பொழுது, ஹார்வி டைமண்ட் எனும் எழுத்தாளர் கூறிய வாசகம் நினைவுக்கு வருகிறது. அது "You put a baby, an apple and a rabbit in a crib. If the baby plays with the apple and eats the rabbit, I'll buy you a new car" அதாவது... "ஒரு குழந்தையை ஒரு ஆப்பிள் மற்றும் முயலுடன் சேர்த்து தொட்டிலில் வை. அக்குழந்தை முயலை தின்று விட்டு ஆப்பிளுடன் விளையாடினால் உனக்கு ஒரு புதிய காரை நான் இலவசமாக அளிக்கிறேன்(பந்தயமாக)" என்பதாகும்." மனிதன் எந்த விதத்திலும் மாமிசம் உண்ண ஏதுவாய் பிறந்திருக்கவில்லை. தவறான படிப்பிணைகள், சுயநலம் கொண்ட சில அறிவிலிகள் பரப்பிய தவறான கருத்துக்கள்/கொள்கைகள் போன்றவை இன்று மாமிசம் தின்னும் நரக வாழ்க்கையில் மனிதனை தள்ளியிருக்கிறது. கற்றுணருங்கள்.காலம் நெருங்கிவிட்டது. நன்மையை விதைக்க இந்நேரமும் பொன்னேரமே!


நன்றி,
காதலுடன்,
ஜானெஹ் ஷங்கர்