ஒரு சிறிய சினிமா இடைவேளை!

போதுமான நேரம் இல்லாததால் இஸ்லாமிய கருத்துக்கள் பற்றிய இடுகை சற்று தாமதமாகிறது. கூடிய விரைவில் முழுமையான ஒரு உரையை சமர்ப்பிக்கிறேன். இடையே நான் சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு திரைப்படத்தை பற்றி கூற விரும்புகிறேன்.
விஷால், ஆரியா நடிக்க இயக்குனர் திரு.பாலா இயக்கிய "அவன்-இவன்" திரைப்படம் தான் அது.
மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒருமசாலா திரைப்படம் அல்லது விருதுகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் போல தோன்றினாலும் உண்மையில் அதன் சாரம் மிகவும் அர்த்தம் நிறைந்த்ததாக உள்ளது.


மாட்டிறைச்சியை மேற்கோள் காட்டியிருந்தாலும், பொதுவாக இறைச்சியை உண்ணும் அல்லது பிற உயிர்களை கொன்று புசிக்கும் தன்மை எப்படி வன்முறை ஆகின்றது என்பதை படம் தெளிவாகக் கூறுகிறது.

எவ்வாறெனில்,
ஒரு காட்சியில் நடிகர், G.M.Kumar(திரைப்படத்தில் ஐனஸ்-HIGHNESS) மாடுகளை இறைச்சிக்காகவும் பணத்திற்காகவும் கடத்தும் ஒருவனை(நடிகர் R.K.) தட்டிக் கேட்டதற்காக அந்த கயவனிடம் மிகவும் கொடிய முறையில் நிர்வாணப் படுத்தப் பட்டு சாட்டையால் அடிவாங்குவார்.
அக்காட்சியின் உரையாடல் பின்வருமாறு,


ஆர்.கே: நீ என்ன பெரிய காந்தியாடா?

நான் மாடுகளைக் கடத்திக் கொன்னா உனக்கு என்னடா கரிசனம்? என்னை ஏண்டா தொந்தரவு பண்ற? இதையெல்லாம் வாங்கித்திங்கறானுகளே அவங்களை கேக்க வேண்டியது தானே!
இந்த மாடுகளை வெட்டி தின்னா இப்படி துடிக்கிறியே, எங்கேயோ இருக்க ஒட்டகத்தை இங்கே கூட்டி வந்து வெட்டி திங்கறாங்களே, அது என்ன, குர்பானி! அதை கேட்க வேண்டியது தானே?

உன்னாலே எத்தனை லட்சங்கள் போச்சு? எத்தனை லட்சங்கள் போச்சு?"

இவ்வாறு பேசிக்கொண்டே சாட்டையால் அடித்துக் கொலை செய்து விடுவார்.
இதில் கோடிட்ட வார்த்தைகளை கூர்ந்து கவனித்தால் நான் கூறும் செய்தி உங்களுக்கு விளங்கி விடும்.
முதல் வரியில், காந்தியா என்ற கேள்வி... நான் சைவ உணவு முறை பற்றியோ, மிருகங்கள் நலன் பற்றியோ பேசினால், முதலில் நான் சந்திக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் செய்யும் தவறுகளை காந்தி மட்டும் தான் தட்டிக் கேட்க வேண்டுமா என்ன? காந்தி இறந்து விட்டார் என்பதை யாரும் அறிய வில்லையா?
அண்ணல் காந்திஜி யின் பொன்மொழிகளிலே ஒன்றை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்,

"The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated"

அதன் அர்த்தம் பின்வருமாறு,
ஒரு தேசத்தின் பெருமையையும் அதன் நீதி நன்னடத்தை முன்னேற்றத்தையும், அந்நாட்டின் மிருகங்கள் நடத்தப்படும் விதத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.


ஆக காந்தியும் இதையே கூறுகிறார். எனவே இப்படி ஒரு கேவலமான கேள்வி உங்கள் மனதில் எழுமாயின் தயவு செய்து நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடுங்கள்.


அடுத்த வரியில், உனக்கென்னடா கரிசனம்? இது உண்மையிலேயே மனிதாபிமானமுள்ள கேள்வியா? ஆனால் இக்கேள்வியையும் நான் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இங்கே என் கண்முன்னே என் நாட்டின் ஆவினங்களுக்கும், மிருகங்களுக்கும் கரிசனம் காட்ட முடியாத, அல்லது, கரிசனம் காட்டக் கூடாத நான்(நீங்கள்) எங்கேயோ இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கும், ஜப்பான் பூகம்பத்திற்கும் எவ்வாறு கரிசனம் காட்ட முடியும்?
அக்கறை, கருணை, கரிசனம் என்பன அனைத்து உயிர்கள் மீதும் மனிதன் காட்ட வேண்டிய நற்பண்புகளாகும். இதைப் புரிந்து கொள்வீராயின், நீங்கள் ஆறறிவு கொண்ட, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன் என்று பெருமிதம் கொள்ளலாம்.
அதை விடுத்து, மனிதர் மீது மட்டும் தான் கருணை என்றால், நீங்கள் இறைவனின் ஆசிர்வாதத்தை இழக்கிறீர் என்பதை மறக்க வேண்டா!
ஏனெனில் இறைவன், பிற உயிர்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் பரிசளிக்கிறார்.
God Replied, "yes, there is a reward for acts of charity to every beast alive.' (Narrated by Abu Huraira, Bukhari, 3:322)

அடுத்த வரியில் இதையெல்லாம் வாங்கித்திங்கறாங்களே, அவங்களைக் கேட்க வேண்டியது தானே? என்ற கேள்வி.
இத்தகைய தொழில் செய்யும் ஒவ்வொரு இஸ்லாமியனும், இந்துவும், கிறித்துவனும் கேட்கும் கேள்வி இது.

இது தேவையா என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்! நாம் செய்யும் தவறு என்னவென்று உங்களுக்கே புரியும். அசைவம் உண்பவரைக் கேட்டால் மாமிசம் வெட்டுபவர்களையும், வெட்டுபவரைக் கேட்டால் உண்பவரையும் பழித்துக் கொள்வது போல் பழித்து இரங்குவது போல் இரங்குகிறார்கள். இத்தகைய முரண்பாடே அசைவ உணவு முறையின் மிக இழிவான உண்மை நிலையாகும்.

அடுத்தது குர்பானி! சற்றே கிளர்ச்சியைத் தூண்டும் ஒரு கொடும் செயல். நீங்கள் என்னதான் இறைவனுக்காக இறைவனுக்காக என்று கூவி கூவிக் கொடுத்தாலும் இறைவன் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஏனென்றால், பலி அல்லது SACRIFICE என்பதன் உண்மையான அர்த்தம் யாதென்றால், உங்கள் உயிரினும் மேலான அல்லது உயிரின் நெருக்கமான ஒன்றை இறை அன்பினால் இறைவனுக்கு விட்டுத் தருவதாகும். அன்றி, உங்களது சில பல ஆயிரங்களுக்காக விமானத்தில் மிரள மிரள வரும் ஒரு சிறு உயிர் அல்ல! இது குர்பான் மட்டுமன்றி அனைத்து பலிகளுக்கும் பொருந்தும்!

அமைதி இல்லம் வலைப்பூவில் இருந்து,
இந்த 'மிருக பலியான' குர்பான் எனப்படுவது புறச் சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது. உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து ஊன் உருக, உளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும்.



இதை தான் இறைவன் தனது அற்புத திருமறையில் '(இவ்வாறு குர்பான் செய்த போதினும்) அதன் மாமிசமோ அதன் இரத்தமோ இறைவனை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சமே அவனை அடையும்' என்று அத்தியாயம் 22 வசனம் 37ல் மிக அற்புதமாக விளக்குகின்றான்.



தன் இறுதிக்காலத்தில் தனக்குப் பிறந்த ஆசை மகனை அல்லாஹ்விற்காக பலி கொடுக்க முன்வருகிறார் ஆபிரஹாம் எனும் பெருமான். அதுவே சிறந்த தியாகம் அல்லது பலி என்று இறைவன் கூறுகிறார். எனவே தோழர்களே இன்று போனால் நாளை சம்பாதிக்கும் பணம் எனும் எச்ச உறவினைத் துறந்து உங்கள் ஆன்மாவை இறைவனுக்கு தியாகம் செய்யுங்கள்.


இறுதியாக,
எத்தனை லட்சங்கள், எத்தனை லட்சங்கள்!? இன்னொரு உயிரைக் கொன்று தனக்கு சொந்தமல்லாத லட்சங்களும் கோடிகளும் நீங்கள் சம்பாதித்தால் என்ன சம்பாதிக்கவில்லை என்றால் என்ன? இறைவனின் அருள் என்பது உங்களுக்கு நஷ்டக் கணக்கில் அல்லவா சேர்கிறது?

இவ்வாறு இத்திரைப்படத்தின் இந்தக்காட்சி இத்தகைய சீரிய செய்தியை கூறுகிறது. என்ன செய்ய சில மனிதர்கள் செவி சாய்ப்பதில்லை! இறைவனை மறந்துவிடாதீர்கள் அன்பர்களே! இஸ்லாமின் கொள்கைகளை அடுத்த இடுகையில் நிச்சயம் பதிவு செய்கிறேன்.

நன்றி!
காதலுடன்,


நமக்காக இத்திரைப்படத்தை சாத்தியமாக்கிய, இயக்குனர் பாலா அவர்களுக்கும், நடிகர்கள் விஷால், ஆரியா அவர்களுக்கும் நன்றிகள், பாராட்டுகள்!!!