ஒரு POV கதை (POINT OF VIEW)

ஒரு POV கதை (Point of View)

(இந்தக் கதையில் நீங்கள் தான் ஹீரோ, கிளைமாக்சை முடிவெடுக்கும் அதிகாரமும் உங்களுக்கு உண்டு, எனவே கதையை முழுதாகப் படிக்கவும்)

(பொறுப்புத் துறப்பு | DISCLAIMER

இந்தக் கதையில் வரும் அனைத்தும் கற்பனையே அன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் சொல்லப்படும் உண்மைகள் அல்ல. முழுக்க முழுக்க, முடிந்தால், நகைச்சுவை உணர்வோடு இந்தக் கதையை படிக்கவும். நன்றி)


காலம் :
21-ஆம் நூற்றாண்டின் ஒரு போதாத காலம்

இடம் : உங்கள் கற்பனைக்கெட்டும் இடம்


நீங்கள் ஒரு அன்னிய தேசத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்ரவதைகளுக்கு உட்படுத்தப் படுகிறீர்கள். அந்த நாட்டின் பாரம்பரியம் அது. அப்பாவிக் கைதிகளை கொடுமைப் படுத்தி அவர்களை அடக்கி ஆள்வதில் அவர்கள் பல நூற்றாண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார்கள்

(அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்). உங்களை உசுப்பேத்தி அடக்கும் முறைகளில் பல தினுசுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். உங்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவுவார்கள், உங்கள் ஆசன வாயில் அழகான தார்க் குச்சியைக் கொண்டு குத்துவார்கள். உங்கள் காதைக் கடிப்பார்கள். இப்படி பல வழிகளில் உங்கள் முரட்டுத்தனத்தையும் கோபத்தையும் தூண்டி இறுதியில் உங்களை அடக்கி பெருமை கொள்வார்கள்.

http://image.slidesharecdn.com/tourture-091217082538-phpapp02/95/human-rights-project-torture-2-728.jpg?cb=1261038371

ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால் அவர்கள் என்னதான் உங்களை கொடுமைப் படுத்தினாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். உங்களுக்கு நல்ல உணவு, நல்ல தங்கும் இடம், அவ்வப்போது செக்ஸும் உண்டு. உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாத அளவுக்கு சத்தான போஜனம் உறுதி. சுருங்கச் சொன்னால், உங்களைப் பிள்ளையைப் போல பார்த்துக் கொள்வார்கள். உங்களிடம் இதெல்லாம் ஒரு விளையாட்டுத்தான் என்று பாசமாக சொல்லி விடுவார்கள். உங்களுக்கு இது காட்டு மிராண்டித் தனமாகவோ, முரட்டுத் தனமாகவோ தோன்றினால் கம்பெனி பொறுப்பேற்காது. ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது என அந்த நாட்டவர் மட்டுமல்லாது அனைவரும் நம்புகிறார்கள்.

//// மினி பிளாஷ்பேக்-1

உண்மையில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் நாட்டில் உங்களைப் போல அடிமைகளை வீட்டுக்கு வீடு வளர்த்து வந்த ஒரு பிரிவினர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மணம் செய்ய சிறந்த ஆணைத் தேர்ந்தெடுக்க, உங்களோடு நேருக்கு நேர், ஒற்றைக்கொற்றையாக மோதவிட்டு, இறுதியில் உங்களைத் தழுவி இழுத்து வருமாறு போட்டி வைப்பார்கள். ஆனால் அப்போதிருந்த வாழ்க்கை முறை வேறு. நடைமுறைகளும் வேறு. இப்போது, ஊர் கூடி உங்களைக் கொடுமைப் படுத்துமாறு விளையாட்டை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். சூதாட்டமும், பணப்பரிசும் போனஸ். நோக்கம் உங்களை அடக்குவதல்ல, பெண்ணை மணம் புரிவதல்ல உங்கள் காதில் தொங்கும் பணத்தை அடைவது தான். ////

இப்போது, ஏதோ ஒரு இன உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு இந்த விசயம் எட்டுகிறது. உடனடியாக உங்களை மீட்டே ஆக வேண்டும், இந்த சித்ரவதைகளுக்கு தடை உத்தரவு போட வேண்டும் என அந்த ஆணையம் போராடுகிறது. வழக்கு நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
//// மினி பிளாஷ் பேக்.-2

உங்களைப் போன்ற அடிமைகளை உற்பத்தி செய்து அந்த நாட்டுக்கு சப்ளை செய்ய ஒரு கும்பல் இருக்கிறது. அவர்களின் வேலை என்னவென்றால், உங்களைப் போல சிறந்த உடல்வாகு உள்ள அடிமைகளை, பிறவியிலேயே இனம் கண்டு, பல கட்ட பயிற்சிகள் கொடுத்து, நல்ல தீனி போட்டு நல்லதொரு சந்தையில் விற்பது தான். அப்படித்தான் நீங்களும் இந்த  சிறைச்சாலைக்கு வந்திருக்கிறீர்கள். ////

அவர்களுக்கு இந்த தடை உத்தரவு பெரும் மண்டைக் குடைச்சலாய் இருக்கிறது. ஏனென்றால் இது அவர்களின் தொழில். பணம் காய்க்கும் ஆலமரம்.

அவர்கள் ஏனைய கள்ளக்கடத்தல், ஏற்றுமதி இறக்குமதி தொழிலதிபர்களைப் போலவே மிகவும் வசதி படைத்தவர்கள். எனவே என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். இதற்கு முடிவு கட்டுவதென்று தீர்மானிக்கிறார்கள்.

இப்போது மீண்டும் தற்போதைய காட்சிக்கு வருவோம்.

உங்களுக்கு நேரும் கொடுமைகளை எல்லாம் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கிறது அந்த இ.உ.ஆணையம். இதைப் பார்த்து பல இளகிய உள்ளம் கொண்ட வீரமில்லாத கோழைகள் தாங்களும் இந்த கொடுமையை எதிர்ப்பதாக கிளம்புகிறார்கள்.

பேஸ்புக் தொடங்கி பேங்க் பாஸ் புக் வரைக்கும் பலரும் பல விதமாய் உங்களைப் பற்றி தட்டச்சு செய்து பரப்புகிறார்கள். இது நாள் வரை உலகப் பிரசித்தி பெற்ற ஒரு சம்பிரதாயமாக இருந்த உங்கள் சிறை வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக ஒளி இழக்கிறது.

இந்த சமயத்தில் மிக நேர்த்தியாக அந்த தொழிலதிபர்கள் களத்தில் இறங்குகிறார்கள். ஊரில் இந்த சம்பிரதாயத்தில் ஆதரிப்பவர்களின் பலவீனம் என்ன என்று ஆராய்கிறார்கள். ஆதரிப்பவர்களை ஒன்று திரட்டினால் இந்த சிக்கலை வைத்து கொஞ்ச காலம் குளிர் காயலாம் என்பதோடு அவர்களின் தொழிலுக்கும் எந்தத் தடையும் இருக்காது. அப்போது தான் அவர்களுக்கு அந்த துருப்புச் சீட்டு கிடைக்கிறது. அது தான் பாரம்பரியம் எனும் வார்த்தை. இதை ஆதரிப்பவர்களின் குணாதிசயம் என்னவென்றால், நீங்கள் சிறைப்பட்டுள்ள நாட்டுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை என்றாலும், அந்த நாட்டின் மற்ற எந்தப் பிரச்சினைக்குமே அவர்கள் தலை காட்ட மாட்டார்கள் என்றாலும், அந்த நாட்டின் பாரம்பரியம் பற்றி எதுவுமே அவர்களுக்கு தெரியாது என்றாலும் கூட, அந்த நாட்டின் பாரம்பரியம் பற்றி மிகவும் பெருமைப் படுவார்கள். அதற்காக பல வார்த்தைகளை டைப் செய்வார்கள். ஆனால் மறந்தும் அந்த நாட்டின் இலக்கியங்களையோ, விதிமுறைகளையோ சட்டங்களையோ படிக்க மாட்டார்கள்.

எனவே பாரம்பரியம் பாரம்பரியம் என அந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஆதரிப்பவர்களை எல்லாம் ஒன்று திரட்டுகிறார்கள் அந்தத் தொழிலதிபர்கள். ஆதரிப்பவர்களை மட்டும் ஒன்று திரட்டினால் போதுமா, ஆதரிக்கலாமா எதிர்க்கலாமா என குழப்பத்தில் இருப்பவர்களை ஒன்று திரட்ட வேண்டாமா? அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினார்கள். குழப்பத்தில் இருப்பவர்களின் பலவீனம் என்ன என்று தேடுகிறார்கள். அவர்களின் பலவீனமே எந்தப் பக்கம் கூட்டம் கூடுகிறதோ அங்கே சென்று ஆதரவு தெரிவிப்பது தான். பைப்பரின் இசைக்கு மயங்கும் எலிக்கூட்டம் போல இந்தக் கூட்டமும் இசைக்கு மயங்கும். உடனே அந்தத் தொழிலதிபர்கள் பிடித்தார்கள் ஒரு இசைக் கலைஞனை. போடுடா பாட்டை என்றார்கள். அவர் ஏற்கனவே பல கிளுகிளுப்பான பாடல்களைப் பாடிய மொழிப்பற்றில் தன்னையே இழந்த நவீன பாரதியார் ஆவார். பாட்டைப் போட்ட உடனே மீதி இருக்கும் கூட்டமும் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆதரிக்கக் கிளம்புகிறது.

இவ்வளவு நடக்குதே உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டார்களா என்றால் இல்லை. ஏனென்றால் ஆதரிப்பவர்கள் ஒரு முறை கூட உங்கள் கண்களைக் கண்டதில்லை. அவர்களுக்கு உங்கள் பாஷை புரியாது. அவர்கள் ஒரு முறை கூட உங்களைப் போன்ற பிற அடிமைகளுக்கு நேரும் கொடுமைகளுக்காக இரங்கியதில்லை. சொல்லப் போனால் அவர்களுக்கும் இந்த சாடிசம் ஒரு போதையைக் கொடுத்து வந்தது. அவர்கள் உங்களை விட பல மடங்கு கொடுமைகளை அனுபவிக்கும் அடிமைகளைக் கண்டும் காணாமல் நகர்ந்து செல்லும் வீரம் மிக்கவர்கள்.

எனவே அவர்கள் மிக எளிதாக உங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் மனோதிடம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்போது அந்தத் தொழிலதிபர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்து விட்டது. ஆனாலும் இந்தக் குழப்பத்தில் எஞ்சி உள்ளவர்களையும் ஒன்று திரட்டிவிட்டால் அவர்களுக்கு இன்னும் அதிகமாக நேர அவகாசமும் ஆதரவாக தீர்ப்பும் கிடைக்கும். சரி அடுத்த துருப்புச் சீட்டைத் தேடுகிறார்கள். கிடைத்தது அடுத்த துருப்புச் சீட்டு, அது என்ன வென்றால், இந்த பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என எல்லாருக்கும் ஒரு பொதுவான விழிப்புணர்வு ஒன்று சமீபத்தில் வரத் தொடங்கியிருந்தது. அந்த விழிப்புணர்வு யாதெனின், இந்த நாடு மட்டும் அல்லாது இந்த கொடுமைகள் நடக்கும் அந்த நாட்டுக்கும் கார்ப்பொரேட்டுக் கம்பெனிக்காரன் தான் ஒரே எதிரி எனும் செய்திதான் அது.

இந்த செய்தி ஏற்கனவே பல வருடங்களாக ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தாலும் அதன் தாக்கம் சமீபத்தில் வெளிவந்த சினிமாக்களினால் சற்று பெரிதாக இருந்தது. இது இந்தத் தொழிலதிபர்களுக்கு சாதகமாக தோன்றியது. வேடிக்கை என்னவென்றால் இந்த தொழிலதிபர்கள் இந்தக் கார்பரேட்டுக் கம்பெனிகளுக்கு வேறு சில வகையான ஸ்பெஷல் அடிமைகளை சப்ளை செய்து கொண்டிருந்தவர்கள் தான். ஆனால் இந்த விசயம் அடிமைகளாகப் போகிறவர்களுக்கே தெரியாது.

உடனே இந்த செய்தியை இப்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடுகிறார்கள் அந்தத் தொழிலதிபர்கள். ஊருக்குள்ளே இந்தச் செய்தியை பொத்தாம் பொதுவாக பரப்புகிறார்கள். யாரோ கார்பரேட்டுக் கம்பெனிக் காரனாம், அவன் நம்ம நாட்டில் இருக்கும் சிறந்த அடிமைகளை அழிக்கப் போகிறானாம்" என்று ஆதரவாளர்களை விட்டு பரப்புகிறார்கள்.

இந்த சம்பவத்தை எதிர்க்கும் இளகிய மனமுடைய கோழைகளுக்கும் இந்த விசயம் தெரியும். ஆனால் அவர்களுள் பலர், உண்மையிலேயே எந்த விதத்தில் கார்பரேட்டுக் கம்பனிக்காரன் போர் தொடுக்கிறான் என்ற விவரத்தை ஏற்கனவே அறிந்தவர்கள். அவர்களில் ஒருவனிடம் வந்து யானைப்பால், இல்ல, ஞானப்பால் குடித்த நண்பன் ஒருவன் இது மாதிரி சொன்னான்.

"டேய் உனக்குத் தெரியுமா? கார்பரேட் கம்பெனிக் காரன் படையெடுத்து வரப்போகிறானாம்"

"எப்போது வருகிறானாம்?"

"எப்போது வேண்டுமானாலும் வருவான். இன்னிக்கி, நாளைக்கி நாளான்னிக்கி... அதான் பாத்த இல்ல, அந்த நாட்டுல நடக்குற விளையாட்டைத் தடை செய்ய சதி செய்யுறாங்க. இந்த விளையாட்டு எதுக்கு? அடிமைகளைக் கொடுமைப் படுத்தவா? இல்லை, விவசாயிகள் நலனுக்காக, விவசாயிகள் ஏர் ஓட்ட லைசென்ஸ் எடுக்க அந்தக் காலத்தில் இந்த விளையாட்டை விளையாடிருக்காங்க, அது மட்டுமா, இன்னும் பல நல்ல விசயங்கள் இந்த விளையாட்டுல இருக்கு(ஆனா என்னன்னு எனக்கு தெரியாது) இந்த விளையாட்டை எங்க தாத்தா பாட்டி கூட விளையாடிருக்காங்க, எங்க அப்பா இந்த விளையாட்டை விளையாட முயற்சி செஞ்சு Entrance Exam வரைக்கும் போயி தோத்துப் போயிட்டாரு, நான் இந்த விளையாட்டை டிவில கூட முழுசா உக்காந்து பாத்ததில்ல, அட் லீஸ்ட், என் பையனாவது இந்த விளையாட்டை விளையாடனும்னு இப்பத்தான் ""கொடுமைப் படுத்துவது எப்படி""ங்கற கோச்சிங்க் கிளாஸ் சேர்த்து விட்டிருக்கேன். அதுக்குள்ள இந்த விளையாட்டைத் தடை செய்ய கார்பரேட்டுக் கம்பெனிக்காரன் சதி பண்ணிட்டான் பாத்தியா? "


இப்போது இந்த இளகிய மனம் கொண்ட கோழைக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது,
"ஏண்டா, ஏதாவது புதிய செய்தி கொண்டு வாடா என்றால் ஏற்கனவே நாட்டுல நூறு வருசத்துக்கு மேல நடந்துகிட்டிருக்க ஒரு விசயத்தையே என்னவோ இப்பத்தான் நடக்குற மாதிரி மாத்தி சொல்லிகிட்டுத் திரியுற. இதுக்கும் அந்த விளையாட்டுக்கும் என்ன சம்மந்தம் என்று உருப்படியா ஏதாச்சும் படிச்சிருக்கியா? இல்ல ஊரோட சேர்ந்து ஜால்ரா அடிக்கிறியா? மரியாதையாகச் சொல். எங்கே சென்றிருந்தாய்?" என்று அவன் கழுத்தைப் பிடித்துக் கேட்கிறான்.

இவன் திணறியபடியே சொல்கிறான், "இல்லடா, புதுசா ஒரு 30-30 மேட்ச் நடத்துறாங்க, அங்கே சென்று செல்பி எடுத்துவிட்டு, குப்பாப்பு பாட்டு கேட்டு விட்டு அப்படியே ஆட்டத்தைச் சிறப்பித்து விட்டு வருகிறேன்" என்று.

இப்படியே போயிட்டிருக்கும் போது ஒரு நாள்,
திடீர்ன்னு , உங்களை மட்டுமல்லாது உங்களோடு சேர்த்து இன்னும் சில அடிமைகளையும் சிரச்சேதம் செய்யலாம்ன்னு முடிவு கட்டுறாங்க. உங்களுக்குச் சோறு போட்டு வளர்ப்பதே இந்த விளையாட்டுக்குத் தான், இந்த விளையாட்டு இல்லாம உங்களை வளர்க்கச் செலவு செய்து ஒரு பயனும் இல்லை என்று பல்டி அடிக்கிறார்கள். அப்போது நீங்கள் அப்பாவியாய் அவர்களைப் பார்த்துக் கேட்கிறீர்கள், "அடப்பாவிகளா, கூடப் பிறந்த தம்பின்னு சொன்னீங்க? பெத்த பிள்ளைன்னு சொன்னீங்க? பால் பாக்கெட் விளம்பரம் மாதிரி என்னைக் காமிச்சு வீடியோ எல்லாம் எடுத்தீங்க? இப்ப என்னடா இப்படி சொல்றீங்க" என்று. ஆனால் பாவம் அவர்களுக்குத் தான் உங்கள் பாஷை தெரியாதே.

இப்போது ஊருக்குள் உங்களைப் பற்றிய பேச்சுத் தான் எங்கும். ஒரு பக்கம் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆதரித்துப் பலர் மீம்ஸ் போட்டு விட்டு உங்களை விட அதிகமாக கொடுமைப் படுத்த சில அடிமைகளை வாங்க சந்தைக்குச் சென்று விட, இன்னொரு பக்கம் உங்களை எப்படியாச்சும் அந்தச் சிறைல இருந்து மீட்டுடலாம்ன்னு இளகிய மனம் கொண்ட கோழைகள் எல்லாம் போராடிக்கிட்டு இருக்காங்க.

இப்ப சொல்லுங்க பாஸ்! உங்களை மீட்கனுமா வேணாமாங்கற முடிவை As a victim, உங்க கையிலயே கொடுத்தா என்ன முடிவு எடுப்பீங்க?

கதை புரிஞ்சு உண்மையிலயே உங்களுக்கு மனசாட்சி இருந்தா ஷேர் பண்ணுங்க.
புரியாதவங்க மேல படிங்க.
கதையில் வரும் ஹீரோவாக காளை மாட்டை நினைத்துக் கொள்ளுங்கள். 
பிற அடிமைகளாக ஆடு மாடு கோழி காடை கவுதாரி முயல் மயில் புறா பன்றி என எந்த விலங்கினத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள். அனைத்துக்கும் விதி ஒன்று தான், கூண்டில் அடைபட்டே மரணிப்பது. 
தொழிலதிபர்களாக BREEDING எனப்படும் பணத்துக்காக விலங்குகள் இனவிருத்தி செய்யும் தொழில் செய்பவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். இதில் வெளிநாட்டு நாய், பூனை போன்றவற்றை வைத்து தொழில் செய்பவர்களும் உண்டு. 
இன உரிமை ஆணையமாக புளூ கிராசையும் பீட்டாவையும் நினைத்துக் கொள்ளுங்கள். 
இளகிய மனம் கொண்ட கோழைகளில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். 
நீங்கள் வீரனா கோழையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

EDIT: நாட்டு மாடுகளை காப்பது எப்படி என்ற திடீர் அக்கறை உங்களுக்கு வருவதில் தவறில்லை. ஏனென்றால் உங்களைச் சுற்றி உள்ள மீடியா இப்படிப்பட்ட திடீர் உணர்ச்சிவசஙளை விதைத்து விட்டது.

நாட்டு மாடுகளை மட்டுமல்லாது இதர நாட்டு விலங்குகளைக் காக்கவென்று ஒரு அமைச்சகம் இருக்கிறது. அந்த அமைச்சகம் தூங்குகிறது. அதற்கு எதிராக போராடுங்கள்.

மேலும் நாட்டு மாடுகள் அழிவதன் அடிப்படை காரணம் நமது அபரிமிதமான பால் தேவை தான். என்று ஆவினங்கள் பால் தரும் எந்திரமாக மாற்றப்பட்டு பால் என்பது தொழில்மயமாக்கப்பட்டதோ அன்றே நாட்டு மாடுகள் இனம் அழியத்தொடங்கி விட்டது. இந்த அடிப்படை லாஜிக் புரிந்தால் நாட்டு மாடுகள் இன அழிப்பிற்கு நீங்களே ஒரு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்வீர்கள்.

இப்போது சொல்லுங்கள், நாட்டு மாடுகளை காக்க கீழ்க்காணும் மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வர நீங்கள் தயாரா?

1. பால் பாக்கெட் வாங்குவதை நிறுத்தவேண்டும். உங்கள் ஏரியாவில் உள்ள பால்காரரை நாட்டு மாடு வளர்க்க ஊக்குவிக்கவேண்டும்.

2. இதன் விளைவாக பால் சப்ளை வெகுவாக குறைந்துபோகும், அதனால் நீங்கள் நாளொன்றுக்கு 2 லிட்டர் பால் எல்லாம் நினைத்த நேரத்தில் வாங்க முடியாது, வாங்கக் கூடாது.

3. நீங்களே கூட நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்கலாம். அதன் மூலம் பசுஞ்சாண உரம் மற்றும் எரிவாயு கிடைக்கும். பால் மிஞ்சினால் நீங்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள்; ஆனால் புரிந்து கொள்ளுங்கள் கன்றுக்குட்டி போஷாக்குடன் பசி தீரவே அந்தப் பால் என்பதை.

4. சீஸ், பட்டர், பனீர் என எந்தப் பால் தயாரிப்பு மீதும் உங்களுக்குள்ள மோகத்தை நீக்க வேண்டும். தமிழர் பாரம்பரியத்தில் பனீர் பட்டர் மசாலா எல்லாம் கிடையாது, அதிக பட்சம் நீர் மோர், மருந்துக்கு நெய் அவ்வளவே!

5. தோல் பொருட்களை நினைத்தும் பார்க்கக்கூடாது;

சுருக்கமாகச் சொன்னால், சங்க காலத்தை போலவே மாடுகளை உயிரும் உணர்வும் உள்ள ஜீவனாக பார்க்க வேண்டும்.

எந்திரங்களாக சுயலாபத்துக்காக பணமரமாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

உங்கள் கேடுகெட்ட அவசர உலகில் இதெல்லாம் சாத்தியமில்லை என நினைத்தால் அதுதான் உலகில் நாட்டு மாடுகள் மட்டுமல்ல, பல அரிய வகை உயிரினங்களும் அழியக்காரணம் என்பதை கல்வெட்டில் பொறித்துக்கொண்டு அப்புறமா #IsupportJallikattu என பொங்குங்கள். 

இதை எல்லாம் செய்ய காளையை விட அதிக மூர்க்கம் கொண்ட மனதை அடக்கத் தெரிய வேண்டும். தமிழ்ப் பாரம்பரியம் என்றால் அதுவும் தான். எனவே.....

நன்றி.